குமாரபுரம் படுகொலை சந்தேகநபர்களுக்கு மரணதண்டனை வழங்க கோரிக்கை

திருகோணமலை மாவட்டத்திலுள்ள மூதூர் – குமாரபுரம் கிராமத்தில் இருபது வருடங்களுக்கு முன்னர் நடந்த படுகொலை சம்பவத்துடன் தொடர்புடைய இராணுவ உறுப்பினர்களுக்கு மரண தண்டனை வழங்குமாறு, அரச தரப்பு சட்டத்தரணி சுதர்சன டீ சில்வா, அநுராதபுரம் மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரட்ணவிடம் கோரியுள்ளார்.

நேற்று வெள்ளிக்கிழமை (22) அவர் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார் என, பொலிஸார் தெரிவித்தனர்.

26 பேர் படுகொலை செய்யப்பட்ட இச் சம்பவம் தொடர்பில், ஆறு இராணுவ உறுப்பினர்களுக்கு எதிராக குற்றம்சுமத்தப்பட்டு வழக்கு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதற்கமைய வழக்கின் சாட்சியங்களுக்கு ஏற்ப, முன்னாள் இராணுவ உறுப்பினர்களே இந்தக் கொலைகளை மேற்கொண்டமைக்கான நியாயமான சாட்சியங்கள் சந்தேகமின்றி உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் அரச தரப்பு சட்டத்தரணி சுதர்சன டீ சில்வா சுட்டிக்காட்டினார்.

முறைப்பாட்டாளர் சார்பில் வாய்மொழி மூலம் விடயங்களை எடுத்துக்கூறும் போதே, சட்டமா அதிபரை பிரதிநிதித்துவப்படுத்தும் சிரேஷ்ட அரச சட்டத்தரணி இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

குற்றம் இடம்பெற்று பல வருடங்கள் கடந்துள்ள நிலையில், முறைப்பாட்டாளர்களின் சாட்சியங்களில் சில மாறுபாடுகள் ஏற்படலாம் என நீதிமன்றில் குறிப்பிட்ட அவர், சாட்சியங்களில் காணப்படும் மாறுபடுகள் அல்லது மாற்றங்கள் பிரதிவாதிகள் குற்றச்சாட்டுகளில் இருந்து விடுபடும் அளவுக்குப் போதுமானதாக இல்லை எனவும் கூறினார்.

அத்துடன், இந்த வழக்கின் தீர்ப்பு தொடர்பில் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அநுராதபுரம் மேல் நீதிமன்றத்தினால், தனித்தனியாக 121 குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவ உறுப்பினர்கள் 6 பேரும் இம் மாதம் 25ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

ஜூரிகள் சபை முன்னிலையில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

திருகோணமலை, தெஹிவத்த இராணுவ முகாமில் குறித்த சந்தேகநபர்கள் கடமையில் ஈடுபட்டிருந்த போது, 1996ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 11ம் திகதி அல்லது அதனை அண்மித்த ஒரு தினத்தில் மூதூர் – கிளிவெட்டி குமாரபுரத்தில் இந்தக் கொலை சம்பவத்தினை மேற்கொண்டுள்ளதாக அவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இதன் சாட்சி விசாரணைகள் கடந்த 27.06.2016 முதல் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. 11 நாட்கள் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் நேரடியாக பார்வையிட்ட கிராம மக்கள் சாட்சியங்களை வழங்கியிருந்தனர்.

அவர்கள், குறித்த இராணுவத்தினரை அடையாளமும் காட்டியிருந்தமை குறிப்பிடத்தகது.

இதையும் படியுங்க :   திருமலையில் இரு மாதங்களில் 1000 பேருக்கு டெங்குத் தொற்று 3பேர் சாவு!

Related Posts

About The Author

Add Comment