பாட்டியை காதலித்து மணந்த உக்ரைன் இளைஞர்!

உக்ரைனில் ராணுவத்தில் சேர்வதில் இருந்து தப்பிப்பதற்காக இளைஞர் ஒருவர் 81 வயது மூதாட்டியைத் திருமணம் செய்து கொண்டது தெரிய வந்துள்ளது. உக்ரைன் நாட்டில் 18 முதல் 26 வயது வரையிலான ஆண்கள் கட்டாயமாக ராணுவத்தில் சேர்ந்து நாட்டிற்காக பணியாற்ற வேண்டும் என்ற சட்டம் உள்ளது.

ஆனால் மாற்றுத்திறனாளி பெண்ணை கவனித்துக் கொள்ளும் ஆண்களுக்கு இது பொருந்தாது. அவர்களுக்கு மட்டும் கட்டாய ராணுவ சேவையில் இருந்து விலக்கு அளிக்கப்படும்.

இந்நிலையில், இந்த வசதியைப் பயன்படுத்தி ராணுவத்தில் சேர்வதில் இருந்து தப்பிக்க நினைத்துள்ளார் அலெக்சாண்டர் கோண்ட்ரட்யும் என்ற 24 வயது இளைஞர். அந்நாட்டின் மேற்கு மத்திய பகுதியில் அமைந்துள்ள வின்னிட்சியா நகரை சேர்ந்த இவர், இதற்காக தேர்ந்தெடுத்த வழி தான் இன்று அவரை உலகம் முழுவதும் பிரபலமாக்கியுள்ளது. கோண்ட்ரட்யுக் தனது நெருங்கிய உறவினரான ஜினாய்டா இல்லரியோனோவ்னா (81) என்ற மூதாட்டியை கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டார்.

ஜினாய்டா மாற்றுத்திறனாளியும் கூட. எனவே கோண்ட்ரட்யுக் ராணுவத்திற்கு செல்வதற்கு விலக்கு கிடைத்தது. ஆனாலும் ஊடகங்கள் மூலம் வெளிச்சத்திற்கு வந்த இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. நாட்டிற்கு சேவை செய்யாமல் தப்பிப்பதற்காக இப்படி குறுக்குவழியில் செல்லலாமா என கோண்ட்ரட்யுக்கிற்கு எதிராக விமர்சனங்கள் எழுந்தன. ஆனால், ஜினாய்டாவை காதலித்து மணந்து கொண்டதாக கோண்ட்ரட்யுக் தெரிவித்துள்ளார். தங்களுக்குள் உன்னதமான காதல் இருப்பதாக ஜினாய்டாவும் கூறியுள்ளார்.

இது ஒருபுறம் இருக்க, திரணத்திற்குப் பின் ஜினாய்டாவை கோண்ட்ரட்யுக் கவனித்துக் கொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது. தொடர்ந்து அவர் தனிமையிலேயே வசித்து வருவதாகவும், ராணுவத்திற்குப் பயந்து தான் கோண்ட்ரட்யுக் இத்திருமணத்தை செய்து கொண்டதாகவும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக அந்நாட்டு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். விசாரணையில் இது போலியான திருமணம் என்பது உறுதி செய்யப்பட்டால் கோண்ட்ரட்யுக்கை ராணுவத்தில் பணியாற்ற அழைப்பு விடுக்க முடியும் என உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படியுங்க :   யார் இந்த டொனால்டு டிரம்ப் ?

Related Posts

About The Author

Add Comment