யாழ் சர்வதேச விமான நிலையம் உத்தியோகபூர்வமாக திறப்பு!

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் உத்தியோகபூர்வமாக திறந்துவைக்கப்படவுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று(வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளது.

யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்திலிருந்து நேரடி விமான சேவைகளும் இந்திய பிராந்திய விமான நிலையங்களான சென்னை, திருச்சி மற்றும் கொச்சியிலிருந்து யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்திற்கு நேரடி விமான சேவைகளும் ஆரம்பிக்கப்படவுள்ளன.

இந்த விமான சேவைகள், எயார் இந்தியாவின் துணை நிறுவனமான அலியன்ஸ் எயார் விமான சேவை நிறுவனத்தால் இயக்கப்படவுள்ளன.

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் என பெயரிடப்பட்ட பலாலி விமான நிலையம் யாழ். நகரிலிருந்து 20 கிலோ மீற்றர் தூரத்தில் அமைந்துள்ளது.

விமான நிலையத்தின் ஓடுபாதை, 1.4 கிலோமீற்றர் வரை புதிதாக விரிவுபடுத்தப்பட்டுள்ளதுடன் மேலதிகமாக ஒரு கிலோமீற்றர் தூரத்திற்கும் ஓடுபாதை விரிவுபடுத்தப்படவுள்ளது.

மேலும், விமானக் கட்டுப்பாட்டு அறை மற்றும் பயணிகள் முனையமும் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ளன.

இன்றைய தினம் இடம்பெறவுள்ள குறித்த நிகழ்வில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட பல முக்கியஸ்தர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.

இதேவேளை, யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலைய திறப்பு விழாவினை அரசியல் தேவைக்காக பயன்படுத்த கூடாது என தேர்தல்கள் ஆணைக்குழு அண்மையில் எச்சரிக்கை விடுத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்க :   எழிலன் இருக்கிறாரா.? அனந்தி மகிழ்ச்சி

Related Posts

About The Author

Add Comment