உள்ளக விசாரணையின் பின்னரே அரசியலமைப்பு சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும்

ஐ.நா உள்ளக விசாரணை நிறைவடைந்த பின்னர் அரசியலமைப்பு சீர்திருத்தத்தினை நடைமுறைப்படுத்த தமிழ் தேசிய கூட்டமைப்பு வலியுறுத்த வேண்டுமென முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

யாழ். ஊடக அமையத்தில் இன்று (13) வெள்ளிக்கிழமை நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

ஐ.நாவின் உள்ளக விசாரணைகளை நடாத்துவதாக இலங்கை அரசாங்கம் வாக்குறுதி அளித்துவிட்டு உள்ளக விசாரணையினை சரியாக நடைமுறைப்படுத்தவில்லை.

அரசியல் அமைப்பினை மாற்றுவதற்கு அரசாங்கம் பல செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது.

எனவே, தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு இரு பொறுப்புக்கள் இருக்கின்றன. அந்தவகையில், அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தையினை நடாத்தி இணக்கப்பாட்டிற்கு வர வேண்டும்.

அத்துடன், வடகிழக்கினை இணைப்பதற்கு அரசு என்ன நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றதென்பதனை தெளிவுபடுத்த வேண்டும் என்றார்.

அதேநேரம், வடக்கில் காணி பொலிஸ் அதிகாரங்களை வழங்க வேண்டிய தேவை இருக்கின்றது. இங்கு காணி ஆக்கிரமிப்பு போக்கு அதிகமாக காணப்படுகின்றது.

எனவே, காணி பொலிஸ் அதிகாரத்தினை வழங்க வேண்டுமென அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும்.

பேச்சுவார்த்தை சரிவரவில்லை என்றால், ஐ.நாவின் உள்ளக விசாரணையினை நிறைவு செய்த பின்னர் அரசியலமைப்பு சீர்திருத்தத்தினை மேற்கொள்ள வேண்டுமென்று உறுதியான வாக்குறுதிகளை வழங்க வேண்டும்.

இலங்கை அரசாங்கத்தினால் உள்ளக விசாரணை மேற்கொள்வதாக கூறியிருந்தும், அந்த உள்ளக விசாரணை நடைபெறவில்லை.

சர்வதேச நீதிபதிகள் குழு வரவழைக்கப்பட்டு விசாரணைகள் நம்பகத்தன்மையுடன் நடைபெற வேண்டும். அரசியல் அமைப்பு சீர்திருத்தத்தினை நடைமுறைப்படுத்துவதற்கு முன்னர் ஐ.நா விசாரணையினை முழுமையாக நடாத்தி முடிக்க வேண்டும்.

உள்ளக விசாரணைகள் சரியான முறையில் உடனடியாக ஆரம்பிக்கப்பட்டு, தமிழ் மக்களின் இன அழிப்பு மற்றும் மனித குற்றங்களுக்கு நியாயங்கள் வழங்கப்பட வேண்டும்.

உள்ளக விசாரணை நடைபெறாமல் அரசியல் அமைப்பு சீர்த்திருத்தம் உருவாக்கப்பட்டால், அரசாங்கம் தமிழ் மக்களை ஏமாற்றி விடும். கடந்த காலத்திலும் தமிழ் மக்கள் ஏமாற்றப்பட்டார்கள். அதே போன்று தற்போதும் ஏமாற்றப்படப் போகின்றார்கள்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வலி.வடக்கு மக்கள் 6 மாத காலத்திற்குள் மீள்குடியேற்றம் செய்யப்படுவார்களென உறுதியளித்திருந்தார். ஆனால், இதுவரையில் அந்த உறுதிமொழியினை நிறைவேற்றவில்லை.

எதிர்வரும் 21 ஆம் திகதிக்கு முன்னர் வலி.வடக்கு மக்களை மீள்குடியேற்றம் செய்யாவிடின் அந்த மக்கள் மிக்பெரிய போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாக கூறியிருக்கின்றார்கள்.

அத்துடன், கடந்த ஓரிரு மாதங்களிற்கு முன்னர் 200 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டும், அந்த பகுதியில் மக்கள் முழுமையாக செல்லவில்லை. அங்குள்ள இராணுவ முகாம்கள், அகற்றப்படவில்லை.

எனவே, அரசியலமைப்பு சீர்திருத்தம் நடைமுறைப்படுத்துவதற்கு முன்னர் தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்துடன் பேச்சு வார்த்தை நடாத்தி, உள்ளக விசாரணையினை நிறைவு செய்ததன் பின்னர், அரசியலமைப்பு சீர்திருத்தத்தினை நடைமுறைப்படுத்த வேண்டுமென்று வலியுறுத்துவதே தமிழ் மக்களுக்கு நன்மை பயக்குமென அவர் மேலும் தெரிவித்தார்.

இதையும் படியுங்க :   ஆய்வில் தகவல் 4,500 ஆண்டுகள் பழமையான மொழி இதுதான்!

Related Posts

About The Author

Add Comment