சுன்னாகம் குடிநீர்ப் பிரச்சி​னை: தேசிய நீர்வள சபை பொறுப்பதிகாரிகளுக்கு பிடியாணை

சுன்னாகம் குடிநீர்ப் பிரச்சினை தொடர்பான வழக்கு விசாரணையில் தேசிய நீர்வள சபையின் பொறுப்பதிகாரிகளுக்கு நீதிமன்றம் இன்று பிடியாணை பிறப்பித்துள்ளது.

யாழ். பிராந்திய பொலிஸ் அத்தியட்சகரினூடாக இந்த பிடியாணையை மல்லாகம் நீதவான் ஏ.ஜூட்ஷன் பிறப்பித்துள்ளார்.

இன்றைய விசாரணைக்கு சமூகமளிக்குமாறு தேசிய நீர்வள சபைக்கு கடந்த வழக்கு விசாரணையின் போது நீதிமன்றம் அழைப்பாணை விடுத்தது.

எனினும் தேசிய நீர்வள சபையின் அதிகாரிகள் இன்றைய தினம் நீதிமன்றத்தில் ஆஜராகாததன் காரணமாக அவர்களுக்கு நீதவானால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கடந்த வழக்கு விசாரணையின் போது வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசனை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுத்திருந்த போதிலும் அவர் இன்றைய தினமும் நீதிமன்றத்தில்
சமூகமளித்திருக்கவில்லை.

நீதிமன்றத்திற்கு இன்று சமூகமளிக்க முடியாததன் காரணம் குறித்து கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் நீதிமன்றத்திற்கு அறிவித்து, அனுமதி பெற்றுள்ளார்.

அதற்கமைய அவரை அடுத்த வழக்கு விசாரணைக்கு சமூகமளிக்குமாறு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

ஏற்கனவே இந்த வழக்கு விசாரணைகளுக்காக பல்வேறு சந்தர்ப்பங்களில் வடமாகாண விவசாய அமைச்சர் நீதிமன்றத்தில் ஆஜராகாதிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, சுன்னாகம் குடிநீர் பிரச்சினை தொடர்பான அறிக்கையொன்றை தேசிய சுற்றுச்சூழல் அதிகார சபை இன்று நீதிமன்றத்தில் சமர்பித்துள்ளது.

இந்த வழக்கு விசாரணை ஏப்ரல் 8 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்க :   தீவிரவாதத்தை ஒழிக்க ஒன்றிணைய வேண்டும்!

Related Posts

About The Author

Add Comment