வித்தியா கொலை வழக்கில் நேரில் கண்ட சாட்சியா? வழக்கில் நடப்பது என்ன?

புங்குடுதீவு பாடசாலை மாணவி வித்தியா படுகொலை தொடர்பாக கண்கண்ட சாட்சி ஒருவர் ஊர்காவற்றுறை நீதவான் முன்னிலையில் சாட்சியை பதிவு செய்துள்ளாரென தெரிவிக்கப்படுகின்றது.

புங்குடுதீவு மாணவி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பதினோராவது சந்தேகநபராக உள்ள உதயசூரியன் சுரேஸ்கரன் என்பவரே அரச தரப்பு சாட்சியாக மாறி சாட்சியம் அளித்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

புங்குடுதீவு மாணவி கொலை வழக்கில் பதினோரவதாக கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நேற்றைய தினம் (திங்கட்கிழமை) ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு எதிர்வரும் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டு உள்ளார்.

புங்குதீவு மாணவி கொலை வழக்கு தொடர்பில் 10 சந்தேகநபர் கைது செய்யப்பட்டு அவர்களுக்கு எதிராக வழக்கு விசாரணைகள் கடந்த பத்து மாத காலமாக ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றது. இவர்களை எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த 3 ஆம் திகதி 11 ஆவது சந்தேகநபரான உதயசூரியன் சுரேஸ்கரன் என்பவர் குற்றதடுப்பு புலனாய்வு பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார்.

கைது செய்யப்பட்ட நபரை ஏற்கனவே கைது செய்யப்பட்ட பத்து சந்தேக நபர்களுடன் சேர்த்து மன்றில் ஆஜர்ப்படுத்தாமல் குற்றதடுப்பு புலனாய்வுப் பொலிஸார் வேறு தவணையில் ஆஜர்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இன்று திங்கட்கிழமை (21) 11 ஆவது சந்தேகநபரை குற்ற தடுப்பு புலனாய்வு பொலிஸார் ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர்.

இதன்போது, நீதிவான் ஏம்.எம்.எம்.றியாழ் சந்தேகநபரை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 1ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார். குறித்த சந்தேகநபர் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

ஏனைய 10 சந்தேகநபர்களும் எதிர்வரும் 28 ஆம் திகதி வரையில் வவுனியா சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதேவேளை கடந்த 4ம் திகதி நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது பதினோராவதாக சந்தேக நபர் ஒருவரை கைது செய்துள்ளதாகவும், குறித்த நபரே கொலை நடைபெறுவதற்கு முன்னைய நாட்களில் யாழில் இருந்து கஞ்சா மற்றும் மதுபான போத்தல்களை ஊர்காவற்துறைக்கு எடுத்து சென்று சந்தேகநபர்களுக்கு கொடுத்ததாகவும் குற்றப்புலனாய்வு பிரிவினரால் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதேவேளை கொலை நடைபெறும் வேளை குறித்த நபர் அப்பகுதியில் நின்றதாக அவரிடம் இருந்து தாம் பெற்ற வாக்குமூலத்தில் தெரிய வருவதாகவும் மேலும் வாக்குமூலத்தின் அடிப்படையில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் குற்றதடுப்பு பொலிசார் மன்றில் தெரிவித்து இருந்தனர் என்பதும் குறிபிடத்தக்கது.

இதேவேளை மேற்படி உதயசூரியன் சுரேஸ்கரன் என்பவரை, குற்றப்புலனாய்வுப் பிரிவினர் ஏற்கனவே ஐந்தாறு தடவைக்கு மேல் விசாரணைக்காக அழைத்து செல்வதும், விடுவிப்பதுமாக இருந்ததாகவும், இவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள முதல் ஒன்பது சந்தேகநபர்களின் நண்பர் எனும் காரணத்தினாலேயே, இவர் அடிக்கடி விசாரிக்கப் பட்டதாகவும் தெரிய வருகிறது.

இதையும் படியுங்க :   54 கிலோ கஞ்சா மல்­லாகத்­தில் சிக்கியது

இதேவேளை இவருக்கும், இச்சம்பவத்துக்கும் எந்தவொரு சம்பந்தமும் இல்லையெனவும் மேற்படி வழக்கில் ஆதாரங்கள், சாட்சிகள் சரிவர இல்லாததினால் இவரைக் கைது செய்து வழக்கை முன்னெடுப்பதாகவும் இவரது உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் இவ்வழக்கு தொடர்பாக இன்னும் நிறைவான விசாரணை முற்றுப்பெறவில்லை. எனவே புங்குடுதீவு மக்களிற்கு இவ்விடயம் தொடர்பாக தகவல் தெரிந்தால் கீழ்வரும் தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளுமாறு குற்றப்புலனாய்வு பிரிவினர் ஊடகங்கள் வாயிலான பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

கூட்டு கொள்ளை மற்றும் குற்றத்தடுப்பு பிரிவு பிரதம அதிகாரி நிசாந்த சில்வா 0773201500 றஹீம் (சார்ஜன்) 0778503002 என்ற தொலைபேசியுடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்கப்பட்டுள்ளனர்.

Related Posts

About The Author

Add Comment