உலகின் 62 நாடுகள் கொரோனா குறித்த சுயாதீன விசாரணைக்கு கோரிக்கை! மிரட்டல் விடுத்த சீனா…

அவுஸ்திரேலியா பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாக நேரிடும் என சீனா பகிரங்க மிரட்டல் விடுத்துள்ள நிலையில், 62 நாடுகளின் ஆதரவுடன் கொரோனா வைரஸின் தோற்றம் குறித்து சுயாதீன விசாரணைக்கு அவுஸ்திரேலியா அழைப்பு விடுத்துள்ளது.

குறித்த புதிய பிரேரணையானது கொரோனா காலகட்டத்தில் உலக சுகாதார அமைப்பின் நடவடிக்கைகள் குறித்து சுயாதீனமான விசாரணையை கோருகிறது.

அவுஸ்திரேலியா முன்வைத்துள்ள இந்த புதிய பிரேரணையை நியூசிலாந்து, இந்தோனேசியா, ஜப்பான், இங்கிலாந்து, இந்தியா, கனடா, ரஷ்யா, மெக்ஸிகோ மற்றும் பிரேசில் ஆகியவற்றுடன் 27 உறுப்பினர்களைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியமும் ஆதரிக்க முன்வந்துள்ளது.

மேலும், எதிர்வரும் செவ்வாயன்று வாக்களிப்பதற்காக உலக சுகாதார மன்றத்தில் வைக்கப்பட உள்ளது.

உலக சுகாதார நிறுவனத்தின் கீழ் உறுப்பினர்களாக செயல்படும் 194 நாடுகளின் சுகாதார அமைச்சர்கள் இந்த வாக்கெடுப்பில் கலந்து கொள்வார்கள்.

இந்த முறை இணையம் வாயிலாக நடக்கவிருக்கும் இக்கூட்டத்தில், அவுஸ்திரேலியாவின் சுகாதார அமைச்சர் கிரெக் ஹன்ட் தனது நிலைப்பாட்டை முன்வைப்பார்.

இருப்பினும், நோய்த்தொற்று தொடங்கியதாக நம்பப்படும் சீனா அல்லது வுஹான் நகரத்தை இந்த பிரேரணை குறிப்பாக குறிப்பிடவில்லை என்றே தெரியவந்துள்ளது.

கொரோனா தொடர்பில் சீனா பல ரகசியங்களை மூடி மறைப்பதாகவே உலக நாடுகளில் பெரும்பாலானவை நம்புகின்றன.

கொரோனா பரவல் தொடர்பில் ஜனவரி 7 ஆம் திகதியே தெரியவந்தும், சீனத்து ஜனாதிபதி ஷி ஜின்பிங் ஜனவரி 23 ஆம் திகதியே, ஹூபே மாகாணத்தை மொத்தமாக முடக்க உத்தரவிட்டுள்ளார்.

ஆனால் இந்த இடைப்பட்ட காலகட்டத்தில் சுமார் 5 மில்லியன் மக்கள், சீனா வழியாக உலகின் பல நகரங்களுக்கும் பயணப்பட்டுள்ளனர்.

இதனிடையே பிப்ரவரி 3 ஆம் திகதி, உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர், நாடுகள் தங்கள் எல்லைகளை மூட வேண்டாம் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

மட்டுமின்றி மார்ச் 11 அன்று கொரோனா ஒரு பெருந்தொற்று என உலக சுகாதார நிறுவனம் உலக நாடுகளுக்கு அறிவிக்கும் வரை உலகின் பல்வேறு நாடுகளுக்கு விமான சேவைகள் முன்னெடுக்கப்பட்டு வந்தது.

ஞாயிற்றுக்கிழமை மாலை நிலவரப்படி உலகளவில் 4.7 மில்லியன் மக்கள் கொரோனாவுக்கு இலக்காகியுள்ளனர்.

இதில் 313,703 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டனர், 2.6 மில்லியன் பேர் சிகிச்சையில் இருந்து வருகின்றனர் மேலும், 1.8 மில்லியன் மக்கள் குணமடைந்துள்ளனர்.

இதையும் படியுங்க :   புகழ்பெற்ற விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் மரணம்

Related Posts

About The Author

Add Comment